அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முகத்துவார பகுதியில், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, கரைப்பகுதியில் தூர்வாரி அள்ளப்பட்ட மணல் குவியலை உடனடியாக அகற்றிடவும், இப்பகுதியில் கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, முகத்துவார பகுதியை அகலப்படுத்தி தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ எழிலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.