அடையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மீண்டும் ஆய்வு செய்தார் முதலமைச்சர்!
சென்னை: அடையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்திருந்தார்.
வடகிழக்கு பருவமழை, கடந்த 16ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையடுத்து சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அடையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆய்வு செய்தார். போர்க்கால அடிப்படையில் படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 12 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.