அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் : எடப்பாடிக்கு செங்கோட்டையன் காலக்கெடு!!
ஈரோடு : அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை கட்சியில் இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன். 1972- ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதே எங்கள் ஊரில் கிளைக்கழகத்தை தொடங்கினோம். 1975ல் பொதுக்குழுவை நடத்துவதற்கான குழுவில் என்னை பொருளாளராக நியமித்தனர். 1977ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தோம். திராவிட இயக்க ஆதரவாளர்களும் ஆன்மிகவாதிகளும் ஏற்றுகொள்ளும் தலைவராக ஜெயலலிதா செயல்பட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆளுமை மிக்க முதலமைச்சர்களாக விளங்கினர்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளாராக ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். முதலமைச்சர் யார் என்ற நிலை வந்தபோது எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்தார். எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சி பணியாற்றினேன்.
காளிமுத்து உள்ளிட்ட தன்னை கடுமையாக விமர்சித்தவர்களை எல்லாம் அரவணைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் 6 பேர் எடப்பாடியிடம் பேசினோம். எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என பழனிசாமியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லை; எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆட்சி மாற்றத்துக்கு வெளியே சென்றவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும்.
தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து, அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை கட்சியில் இணைக்க விரைந்து நடவடிக்கை வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்காவிட்டால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவர்கள் சேர்ந்து அதை செய்வோம். எடப்பாடிக்கு வரும் கூட்டம் வேறு; தொண்டர்களின் மனநிலை வேறு. அதிமுகவில் யார், யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், 10 நாட்களுக்குள் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவேண்டும். காலக்கெடுவுக்குள் அவர்களை இணைக்காவிட்டால் நாங்களே அதனை ஒருங்கிணைப்போம்,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.