அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்: செங்கோட்டையன் பேச்சு
ஈரோடு : அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே தாம் பிரதிபலித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேசுகிறேன் எனக் கூறிவிட்டு, கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என பேரறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்று நினைவூட்ட விரும்புகிறேன்.அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இதை ஜெயலலிதா கட்டி காத்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவே நான் மனம் திறந்து பேசினேன். நான் மனம் திறந்து பேசியதை அதிமுக தொண்டர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர். அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், மக்கள், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்", இவ்வாறு பேசினார்.