“அதிமுக ஒன்றிணைய வேண்டும், வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன்” :செங்கோட்டையன்
சென்னை: அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதன் எதிரொலியாக செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நேற்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மன நிம்மதிக்காக தான் ஹரித்வார் செல்வதாக கூறிய செங்கோட்டையன், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார்.
இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கோவைக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் கருத்துகள் வரவேற்கத்தக்கது. ஹரித்வார் செல்வதாக கூறினேன்; உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஆகவே அவரை சந்தித்துப் பேசினேன். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தேன். அதிமுகவை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து அமித்ஷா, நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; வலுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன். அமித்ஷாவை நான் சந்தித்து பேசிய போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தார். அப்போது, ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன்,"இவ்வாறு தெரிவித்தார்.