16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கெடு மாமல்லபுரம் ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு 10ம் தேதி வரை கெடு விதித்த நிலையில், அவர் மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த, பொதுக்குழு கூட்டத்தில் 16 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், அன்புமணி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால், அவர் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. அப்போது, ஒழுங்கு நடவடிக்கை குழு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ராமதாசிடம் ஒப்படைத்தது. இதனால், கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வரும் 10ம் தேதிக்குள் 16 குற்றச் சாட்டுகளுக்கும் பதிலளிக்காவிட்டால், அன்புமணி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் கூறினார். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த, சூளேரிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது குறித்தும், நடைபயணம் குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காரில் வந்தார். பின்னர், சில நிமிடங்களில் காரில் இருந்து இறங்கிய அன்புமணி செய்தியாளர்களை யார் வரச் சொன்னது என நிர்வாகிகளிடம் கேட்டு கடிந்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.