ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறை
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 22ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறை சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 22, 23 மற்றும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
ஆதிகலைகோல் பயிற்சி பட்டறையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் இளையராஜா சிறப்புரையாற்றுகிறார்.
இப்பயிற்சி பட்டறையில் பழமையான கலைகளையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஒரு நிகழ்வாக வடிவமைக்கப்பட்டு நாட்டுப்புறக் கலை, நாடகக் கலை, இலக்கிய கலை மற்றும் காட்சி கலை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்டு மூன்று நாட்கள் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளது.