ஆதி திராவிடர் நலத்துறை அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க சன் டிவி ரூ.3.50 கோடி நிதி உதவி
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 46 அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை அமைக்க, பால ரக்ஷா பாரத் என இந்தியாவில் அழைக்கப்படும் சேவ் த சில்ட்ரன் அமைப்புக்கு சன் டி.வி. 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, அந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் சாந்தனு சக்ரவர்த்தியிடம் சன் டிவி சார்பில், மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.
கற்பித்தல் முறையை மேம்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 46 அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று பால ரக்ஷா பாரத் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 118 அரசுப் பள்ளிகளிலும், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இதுவரை 10 கோடியே 30 லட்ச ரூபாய் நிதியில் அதி நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகள் சன் டி.வி. நிதி உதவி மூலம் செய்து தரப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் அனுபவம் இனிமையாக மாறியுள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த, ‘சேவ் த சில்ட்ரன்’ அமைப்புக்கு, கடந்த 4 ஆண்டுகளில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி உதவியை சன் டி.வி. வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.