ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209 கோடியில் புதிய கட்டிடம், மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209.18 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு மையங்கள் மற்றும் விடுதிகளை திறந்து வைத்து, ரூ.13.41 கோடியில் 68 வாகனங்களின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.137 கோடியே 31 லட்சத்து 57 ஆயிரம் செலவில் 20 சமூகநீதி விடுதிக் கட்டிடங்கள், ரூ.39 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரம் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள், ரூ.12 கோடியே 72 லட்சத்து 69 ஆயிரம் செலவில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 250 வீடுகள், ரூ.15 கோடியே 93 லட்சத்து 44 ஆயிரம் செலவில் 16 கிராம அறிவுசார் மையங்கள், ரூ.5 கோடியே 40 லட்சம் செலவில் 9 பல்நோக்கு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரம் செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ.5 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரம் செலவில் 25 அவசரகால ஊர்திகள், ரூ.4 கோடியில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, தாட்கோ தலைவர் இளையராஜா, ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.