ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ஒரு வார உண்டு உறைவிட பயிற்சி பட்டறை: நாளை முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ஒரு வார உண்டு உறைவிட பயிற்சி பட்டறை நவம்பர் 10 முதல் 18 வரை நடைபெறுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை இதழியல் கல்வி நிறுவனம் மற்றும் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப்பணி கல்லூரி ஆகியோருடன் இணைந்து இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ஒரு வார உண்டு உறைவிட பயிற்சி பட்டறையை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் நவம்பர் 10 (நாளை) முதல் 18 வரையில் 9 நாட்கள் நடத்துகிறது.
இந்த பயிற்சியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்ற பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்களை சேர்ந்த பட்டதாரிகள் பங்கேற்று பயிற்சி பெற இருக்கிறார்கள். விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு குரல் கொடுக்க ஊடகத்தை ஒரு சமூக மாற்ற கருவியாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இவர்கள் ஊடக உலகில் நுழைய தேவையான எழுத்து, காட்சி, ஒலி மற்றும் டிஜிட்டல் ஊடகத் திறன்கள் பயிற்சியாக வழங்கப்பட உள்ளன.
பங்கேற்பாளர்களுக்கு சென்னை இதழியல் கல்வி நிறுவனமானது நேரடி சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழ்நாட்டில் அனுபவமுள்ள மூத்த பத்திரிகையாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், தரவு இதழியல் நிபுணர்கள் ஆகியோரை கொண்டு நடத்துகிறது. அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செய்தி உருவாக்கும் நடைமுறை பயிற்சிகள் மற்றும் செய்முறை வகுப்புகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக வீடியோ எடிட்டிங், செய்தி தொகுப்பு, தரவு இதழியல் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்யும் 26 பங்கேற்பாளர்களில் இருந்து 15 பங்கேற்பாளர்களுக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்கள் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.