வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜுனா மனு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல் அரசின் அடுக்குமுறைக்கு எதிராக ஜென் இசட், ஜென் எக்ஸ் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டது. பதிவிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்படாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எக்ஸ் தளத்தில் பதிவு செய்து விட்டு பின்னர் அதை நீக்கியதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மூத்த வழக்கறிஞர், ஆம். பதிவு நீக்கப்படவில்லை என்றாலும் கூட வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. ஆதவ் அர்ஜுனா குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல. எதிர்கட்சி என்ற அடிப்படையில் கோபமாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார் என்றார். இதைத்தொடர்ந்து, காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செப்டம்பர் 27 ம் தேதி கூட்ட நெரிசல் நடந்த பின்னர் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனாவுக்கும் பங்கு உள்ளது.
சம்பவம் நடந்த பிறகு 28ம் தேதி நள்ளிரவு எக்ஸ் தளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. மெசேஜ்களை பார்வேடு செய்தாலே குற்றம் என்ற தீர்ப்புகள் உள்ளன. பதிவை நீக்கி விட்டாலும் கூட 1 லட்சம் பேர் வரை அந்த பதிவை பார்த்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆதவ் அர்ஜுனா ஆஜராகவில்லை என்று வாதிட்டார். வாதம் நிறைவடையாததால் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.