அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம்!!
மும்பை : மராட்டிய மாநிலத்தில் அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 26ம் தேதி சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டது. சில குறிப்பிட்ட விதிமுறைப்படி, சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டால், அதற்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் அல்லது மின் வாகனங்கள் மூலம் மூலப்பொருட்கள் அல்லது இறுதி தயாரிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கலாம் என்றும் வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இது இறுதி செய்யப்பட்டால், 2006 சுற்றுச்சூழல் விதிமுறைகளில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. மராட்டிய மாநிலம் கல்யாண் பகுதியில் அதானி நிறுவனம் ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்குகிறது. மும்பை கல்யாண் அருகே ஆம்பிவிலி ரயில் நிலையம் எதிரே இந்த ஆலை தொடங்கப்பட்டால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த ஆலைக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கும் வகையில் புதிய வரைவு விதிமுறை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.