சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்யை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
சியோல்: சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்யை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் முடிவில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு உலக நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்து வருகிறார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு எதிராக 100 % கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தற்போது தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு புஷான் நகரில் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். புஷான் நகரில் நாளை தொடங்க உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உலக பொருளாதாரம், வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தென்கொரியா சென்றுள்ள சீன அதிபர் ஜின்பிங்யை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.