காலை, மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி அரிமளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
*பொதுமக்கள் கோரிக்கை
திருமயம் : அரிமளத்திற்கு காலை, மாலை நேரம் மாணவ, மாணவிகள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இரண்டு அரசு மேல்நிலை பள்ளிகள், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வங்கிகள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இதேபோல் அரிமளத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மிரட்டுநிலை, ஓணாங்குடி, கடையக்குடி, ராயவரம், செங்கீரை, குளவாய்ப்பட்டி, கொத்தமங்கலம், கீழப்பனையூர், ஒத்தபுளி குடியிருப்பு, கீரணிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினம் தோறும் பள்ளிக்கு அரசு பஸ்சில் வந்து செல்கின்றன.
இந்நிலையில் காலை, மாலை நேரம் பள்ளி துவங்கும் முடியும் நேரங்களில் அரிமளத்திற்கு போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தினந்தோறும் காண முடிகிறது.
அதேசமயம் இந்த இரு நேரங்களிலும் அரசு அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்கள் பஸ்சில் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கூட்ட நெரிசலை காரணம் காட்டி ஒரு சில பஸ் ஸ்டாப்புகளில் நிற்காமல் செல்வதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் கூட்ட நெரிசலில் மாணவர்கள் படியில் தொங்கும் போது நடத்துனர் மாணவர்களை உள்ளே செல்லும்படி அறிவுறுத்துவதால் மாணவர்களுக்கு நடத்துனருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து நடக்கும் என்ற அச்சத்திலும், வீண் வம்பு வருமோ எனவும் நடத்துனர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளத்திற்கு காலை மாலை நேரம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரிமளத்தில் அரசு பஸ்கள் சேவையை காலை, மாலை நேரங்களில் பள்ளி வரை நீட்டிக்க வேண்டும்.
அரிமளத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து குளவாய்ப்பட்டி வழியாக தடம் எண் 28, அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி வழியாக தடம் எண் 6, கொத்தமங்கலம் வழியாக தடம் எண் 14 ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட அரசு பஸ்கள் காலை மாலை நேரங்களில் அரிமளத்திற்கு இயக்கப்படும் நிலையில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்த பஸ்கள் அரிமளம் மார்க்கெட், பஸ்டாண்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் பஸ்சை விட்டு இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேசமயம் மாலை நேரங்களில் பள்ளி முடியும் நேரம் சம்பந்தப்பட்ட அரசு பஸ்களில் பயணம் செய்ய மாணவர்கள் சாலையில் சாரையாக இரண்டு கிலோமீட்டர் ஓடுவதை காண முடிகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடம் எண் 6, 28, 14 ஆகிய அரசு பஸ்களை மாணவர்களின் நலன் கருதி அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி வரையில் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரசு பாஸ்கள் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை இயக்கி பின் நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.