வரும் 12ம் தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை: கூடுதல் பயனாளிகளுக்கு வருகிற 12ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், குடும்பத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரும் அரசு ஊழியராக இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரும் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. அதேபோல் 4 சக்கர வாகனம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்த வகையில், அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்திய தமிழ்நாடு அரசு, இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு பெண்களை கேட்டுக் கொண்டது.
மேலும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை வேண்டி இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் பெரும்பான்மை. அதைதொடர்ந்து யாரெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விதிமுறைகள் என்ன என்ற விவரத்தையும் வெளியிட்டது. நவம்பர் 15 வரை நடந்த இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த்துறையினர் தீவிரமாக களஆய்வு செய்தனர். அதன்படி, இத்திட்டத்துக்கு 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 லட்சம் பேர் கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பத்திற்கும் நிலையில் இதுவரை 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.