அடாவடி வரி விதிப்பை கண்டித்து செப்டம்பர் 5-ல் ஆர்ப்பாட்டம்: பின்னலாடை தொழிலை காப்பாற்ற சிறப்பு நிதி தொகுப்பு தேவை!
சென்னை: இந்தியா மீதான அமெரிக்கா அடாவடி வரி விதிப்பை கண்டித்து தமிழ்நாட்டு தொழில் நகரங்களில் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடை தொழிலை காப்பாற்ற சிறப்பு நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் எம்.பி சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி சுப்பராயன் எழுதியுள்ள கடிதத்தில் டிரம்ப்பின் 50சதவீதம் வரியால் திருப்பூரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் இரண்டு லட்சம் பேர் வேலையை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திருப்பூர் பின்னலாடை தொழிலை காப்பாற்ற சிறப்பு நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அவர் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னலாடை நிறுவனங்களில் முன் கட்டணத்தை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஏற்கவேண்டும் என்றும் அமெரிக்கா வரியை எதிர்த்து உலக வர்த்தக மையத்தில் முறையிட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இந்தியா கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து உற்பத்தி தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம் வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத்திட்டத்தை உருவாக்கி உதவ வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசின் அடாவடி வரி விதிப்பை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வரிவிதிப்பால் பாதிப்புக்கு உள்ளன திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். ஏற்றுமதியாளர்க்கு 10சதவீதம் மானியம் வழங்கி அமெரிக்கா வரி விதிப்பை ஈடுகட்ட வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்