தெய்வ மகன் பேச்சுக்கு பதிலடி அதானி, அம்பானிக்கு உதவ அனுப்பப்பட்டவர்தான் மோடி: உபியில் ராகுல் அதிரடி
இறுதிகட்ட மக்களவை தேர்தலையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தியோரா, பன்ஸ்கோயன், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் உடன் சென்றார். பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: எல்லோரும் பயோலாஜிக்கலாக பிறக்கிறோம். ஆனால் மோடி மட்டும் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை என்கிறார். வானில் இருந்து குதித்தவர் என்கிறார். அவரது கடவுள் அனுப்பி வைத்ததாக சொல்கிறார். உண்மையிலேயே கடவுள் அனுப்பியிருந்தால், ஏழைகள், விவசாயிகளுக்கு உதவுமாறு கூறியிருப்பார். ஆனால், மோடியின் கடவுள் அவரை அம்பானி, அதானிக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் மோடியின் கடவுள். ஆட்சி இழந்த பின் நாளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் இப்போது கடவுளை அழைத்துக் கொள்கிறார் மோடி.
இந்த தேர்தல், இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம். ஒருபக்கம் அரசியலமைப்பும், இந்தியா கூட்டணியும் உள்ளன. மறுபுறம், அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் சக்திகள் உள்ளன. நமது அரசியலமைப்பில் தலித்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது அதை அழிக்க பாஜ திட்டமிடுகிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் பேசினார். பின்னர், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ‘‘ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார். அவரால் மீண்டும் பதவிக்கு வர முடியாது. இது என்னுடைய கேரண்டி’’ என்றார்.