அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடுகளுக்கு நிதி அமைச்சகம் ஆலோசனை அளிக்கவில்லை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
புதுடெல்லி: அதானி குழுமத்துக்கு ஆதரவாக அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்வதாக கடந்த அக்டோபரில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது. கடந்த மே மாதம் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் எல்ஐசி ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ளதை அந்த கட்டுரையில் சுட்டி காட்டப்பட்டிருந்தது. ஆனால், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்கு புறம்பானவை என்று எல்ஐசி மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பல ஆண்டுகளாக, அடிப்படைகள், விரிவான உரிய விதிகளின் அடிப்படையில் நிறுவனங்களில் முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளது. நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 6 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது. அதன் மதிப்பு ரூ.38,658.85 கோடியாகும். மேலும் ரூ.9,625.77 கோடியை கூட்டு நிறுவனத்தின் கடன் ஆவணங்களில் முதலீடு செய்துள்ளது. எல்ஐசி நிதியின் முதலீடு தொடர்பான விஷயங்கள் தொடர்பாக நிதி அமைச்சகம் எல்ஐசிக்கு எந்த ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலையும் வழங்குவதில்லை.
அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகள், இடர் மதிப்பீடு மற்றும் நம்பகமான இணக்கத்தைப் பின்பற்றி அந்த நிறுவனம் எடுக்கிறது. அதானி துறைமுகங்கள், சிறப்பு பொருளாதார மண்டலம்(ஏபிஎஸ்இஇசட்) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் எல்ஐசி ரூ. 5,000 கோடி முதலீடு செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி நிறுவப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி இந்த முதலீட்டை செய்யப்பட்டுள்ளது என்றார்.