துர்கா பூஜையில் திடீர் பரபரப்பு; நடிகை கஜோலிடம் பாதுகாவலர் அத்துமீறல் : பாலிவுட்டில் பரபரப்பு
மும்பை: நடிகை கஜோல் கால் தடுமாறியபோது அவரை பாதுகாவலர் பிடித்த விதம் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் தமிழ் நடிகை கஜோல், மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கூடினர். இந்த விழாவில், கஜோல் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தபோது அவரது பாதுகாவலர் உடனடியாக அவரைப் பிடித்தார். அப்போது கஜோல் கடும் ஆக்ரோஷமாக பாதுகாவலரை பார்த்தார். இதுதொடர்பான காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவத்தின்போது, அந்த பாதுகாவலர் கஜோலைப் பிடித்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிலர், அவர் கஜோலை தவறான முறையில் பிடித்ததாகவும், கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். எனினும், வேறு சிலரோ, கஜோல் கீழே விழுந்துவிடாமல் தடுப்பதற்காகவே பாதுகாவலர் அவ்வாறு வேகமாகச் செயல்பட்டதாகவும், அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது எனவும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு, பொது இடங்களில் பிரபலங்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.