இன்றைய அரசியலை தோலுரித்து காட்டும் நடிகை ஹூமாவின் வெப் சீரிசை கண்டிப்பாக பாருங்க மக்களே: டெல்லி மாஜி முதல்வர் பரபரப்பு பதிவு
புதுடெல்லி: வலைத்தொடர் ஒன்றில் இன்றைய அரசியலின் அசிங்கமான யதார்த்தத்தை தோலுரித்துக் காட்டுவதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் டிராமா வலைத்தொடரின் நான்காவது சீசன், கடந்த 7ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படும் ராணி பார்தி (ஹூமா குரேஷி), தேசிய அரசியல் களத்தில் நுழைந்து பிரதமருடன் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதை மையமாக வைத்து இந்த சீசனின் கதை நகர்கிறது.
இந்தத் தொடர் வெளியானதில் இருந்து பரவலாகப் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இதன் மீதான அரசியல் விவாதங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வலைத்தொடர் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிரபல சேனலின் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள வலைத்தொடரை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். இது, இன்றைய அரசியலின் அசிங்கமான யதார்த்தத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இத்தகைய துணிச்சலான படைப்பை வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவாலின் இந்தப் பதிவு இணையத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளதுடன், சில அரசியல் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களையும் பெற்றுள்ளது.