அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி எதிரொலி; நாட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகை: குளிர் தாங்காமல் மீண்டும் நாடு திரும்புகிறார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபரானார். இந்த அரசியல் மாற்றம் பிடிக்காததால், பிரபலத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எலன் டிஜெனரீஸ் மற்றும் அவரது மனைவியான நடிகை போர்ஷியா டி ரோஸி ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவை விட்டு வெளியேறினர். ‘அமெரிக்காவை விட இங்கிலாந்தில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது’ என்று கூறிவிட்டு, அவர்கள் லண்டனில் குடியேறினர். அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் முடிவில் அமெரிக்காவில் இருந்த தங்களது வீடுகள் மற்றும் சொத்துக்களையும் அவர்கள் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் குடியேறிய சில வாரங்களிலேயே அவர்கள் மீண்டும் கலிபோர்னியா திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தின் உறைய வைக்கும் கடும் குளிரைத் தாங்க முடியாததாலும், அங்குத் தங்களுக்கான நண்பர்கள் யாரும் இல்லாததாலும் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், போர்ஷியா டி ரோஸி மீண்டும் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘அவர்கள் நிரந்தரமாக வெளியேற நினைத்தாலும், சூழல் காரணமாக மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்புகின்றனர்’ என்று தெரிவித்தனர்.