நடிகை ரம்யாவுக்கு கொலை மிரட்டல்; நடிகர் தர்ஷனின் 5 ரசிகர்கள் கைது: தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு
பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் தர்ஷன் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகை ரம்யாவை சமூக வலைதளத்தில் மிரட்டிய புகாரில் ஐந்தாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் சம்பந்தப்பட்ட ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தர்ஷனின் ரசிகர்கள் சிலர் ரம்யாவின் சமூக வலைதளப் பக்கத்தில் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இப்புகாரின் அடிப்படையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்தாவது சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.