தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சை கருத்து; விவாகரத்து வழக்கில் கோர்ட் உத்தரவை மீறிய நடிகை: காதலன் விவகாரத்தில் கணவருடன் கடும் மோதல்
அட்லாண்டா: விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்ததாகக் கணவர் சுமத்திய குற்றச்சாட்டைப் பிரபல நடிகை கிம் ஸோல்சியாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை கிம் ஸோல்சியாக் மற்றும் அவரது கணவர் க்ராய் பியர்மேன் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இதுகுறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என இருவருக்கும் நீதிமன்றம் பரஸ்பரத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிம், தனது விவாகரத்து விவகாரம் குறித்தும், தனக்கு ஏற்பட்டுள்ள புதிய காதல் உறவு குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கணவர் க்ராய் பியர்மேன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கணவரின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் கிம் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நான் நீதிமன்ற உத்தரவை மீறவில்லை; அந்தத் தடை உத்தரவு குறிப்பிட்ட ஒரு விவகாரத்திற்கு மட்டுமே பொருந்தும், பொதுவான கருத்துக்களுக்கு அல்ல’ என்று விளக்கமளித்துள்ளார். மேலும், அட்லாண்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் கைல் மோவிட்ஸ் என்பவருடன் தனக்குக் காதல் மலர்ந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் இருவரும் விவாகரத்து என்ற ஒரே மாதிரியான சூழலைக் கடந்து வருவதால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது; ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் முன்னாள் கணவருடன் இணக்கமாகச் செயல்படுவது சாத்தியமற்றதாக உள்ளது’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கிம்-மின் புதிய காதலரான கைல் மோவிட்ஸும் தனது மனைவியை விவாகரத்து செய்ய 100 மில்லியன் டாலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிலும் கிம் ஸோல்சியாக் விசாரிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.