ரூ.60 கோடி மோசடி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக்அவுட் நோட்டீஸ்: மும்பை போலீஸ் அதிரடி
மும்பை: தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் இணைந்து பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2015 முதல் 2024க்கு இடையில் ஜுகுவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரியிடம் ரூ.60 கோடி பணம் வாங்கியுள்ளனர். அதிக வட்டி கட்டுவதை தவிர்ப்பதாக அந்த பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி, அதற்கான லாபத்துடன் சேர்த்து அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் கடன் வாங்கிய பிறகு, ஷில்பா ஷெட்டி நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
அதே போல, நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொழிலதிபர் கோத்தாரியிடம் மறைத்ததோடு, இருவரும் அந்த பணத்தை தங்களது சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மாதம் ஷில்பா ஷெட்டி மீதும் அவரது கணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கும், ராஜ்குந்த்ராவுக்கும் எதிராக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். ஷில்பா ஷெட்டி தம்பதியினர் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால் அதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.