போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் கே.பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டனர்.
நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ், மனுதாரரை கைது செய்தற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் காவல்துறை கைது செய்துள்ளது. அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்றார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்தது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஜூன் 23ம் தேதியும், கிருஷ்ணா ஜூன் 26ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.