நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தந்திற்கான உரிமம் ரத்து: கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கான உரிமம் அவரிடம் இல்லாமல் இருந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடந்தி வந்தனர். தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரிடம் மீண்டும் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வனத்துறை வழக்கை ரத்து செய்தது. இதனால் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணையின் இறுதியில் கேரள நீதிமன்றம் யானை தந்தம் வைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம் மோகன்லாலுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக அரசிதழில் கேரள அரசு வெளியிடவில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சோதனைக்கு பிறகு யானை தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு உரிமம் வழங்கியது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.