நடிகர் அபிநய் மரணம்
சென்னை: கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் (வயது 44) காலமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ‘ஜங்ஷன்’, ‘சிங்காரச் சென்னை’, ‘பொன்மேகலை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு இவர்தான் டப்பிங் குரல் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் வருமானத்துக்கு கஷ்டப்பட்டார். கடந்த சில மாதமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார்.
அவருக்கு, நடிகர்கள் தனுஷ், பாலா உள்ளிட்டோர் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். இந்த நிலையில், கடுமையாக உடல்நிலை பாதித்து அபிநய் நேற்று அதிகாலை வீட்டிலேயே காலமானார். அபிநய், உறவினர்களின் ஆதரவு இல்லாமல் தனியாக வசித்து வந்தார். அபிநய் இறுதி ஊர்வலத்தை நடத்த அவரின் உறவினர்களே ஆர்வம் காட்டாத நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்டு நடிகர் பாலா அவரின் வீட்டிற்கு சென்று காலை முதலே இறுதி சடங்கு தொடர்பான பணிகளையும் அவரே செய்து வந்தார். தகவல் அறிந்து நடிகர் சங்கம் சார்பில் அபிநய் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.