நடிகர் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்: அவரது மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிலை மற்றும் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உடனிருந்தனர். கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.