நடிகர்களுக்காக ரிஸ்க் எடுத்து யாரும் செல்ல வேண்டாம்: நடிகை அம்பிகா அட்வைஸ்
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கரூர் வந்த நடிகை அம்பிகா, சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து உயிரிழந்தவர்கள் வீட்டிற்கும் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு விஜய் யார் என்று தெரியுமா என கேட்பது, நெரிசல்களில் சிக்கி இழப்புகள் ஏற்படும் போது வேதனை அளிக்கிறது. அவர்கள் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என்றால் கூட்டம் வேண்டாம். நாங்கள் கூட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம். நீங்கள் கூட்டம் நடத்தாதீர்கள் என ஒரு முடிவு எடுப்பது அல்லது கலந்து யோசிப்பது என செய்திருக்கலாம்.
41 பேர் இப்படி பிச்சு பிச்சு இறந்தது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசியல் தலைவர்களுக்கும், அரசுக்கும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்றாக தெரியும். நமக்கு பிடித்த நடிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கணும், ஆசையாக இருக்கு என நினைத்தால் அதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அவர்களை பார்ப்பது முக்கியமா அல்லது வாழ்க்கை முக்கியமா, என்னோட வாழ்க்கை தான் முக்கியம். அதற்காக ரிஸ்க் எடுத்து சென்று பார்க்க மாட்டேன் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் மனதில் உறுதியோடு இருந்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.