நடிகர் ரஜினிகாந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171வது திரைப்படமான கூலி நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”1975ம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து 50 ஆண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எனது பாராட்டுகள். அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளை புரிய எனது நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.