கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பரபரப்பு
ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். பிரபல தெலுங்கு நடிகர்களான விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் கடந்த 3ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயி பாபா ஆசிரமத்திற்கு விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
தெலங்கானா மாநிலம், ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விஜய் தேவரகொண்டா பயணம் செய்த சொகுசு காரின் பின்புறம், வேகமாக வந்த மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கார் சேதமடைந்தது. விபத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா பத்திரமாக ஐதராபாத் வந்தடைந்தார். இதுகுறித்து அவரது ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.