நடிகர் ரவி மோகன் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு ஐகோர்ட் அனுமதி..!!
சென்னை: நடிகர் ரவி மோகன் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய பாபி டச் கோல்டு யுனிவர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. படத்தில் நடிக்க பெற்ற முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித் தரக் கோரி பாபி டச் கோல்டு யுனிவர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரூ.5.9 கோடிக்கு சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு கெடு விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு இன்று ஐகோர்ட் நீதிபதி அப்துல் குதூர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் ரவி மோகன் சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யவில்லை அதனால் அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பதில் தெரிவித்த நீதிபதி இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.