நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா சாதனை சுவரோவிய கண்காட்சி
சென்னை: சன் டிவியுடன் இணைந்து, பெர்கர் பெயின்ட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் குறிக்கும் விதமாக ரசிகர்களின் 50 செய்திகளைக் கொண்ட 40 அடி உயரம் கொண்ட ஒரு மாஸ்டர் சுவரோவியம் காட்சிப்படுத்தப்பட்டது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து ஸ்டைலான மறக்க முடியாத தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரங்களை 100 ஓவியர்கள் பெர்கர் பெயின்ட்ஸ் கொண்டு வரைந்த 50 சுவரோவியங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களான மருமகள், எதிர் நீச்சல் ஆகியவற்றில் நடித்து வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில், பிரமாண்ட ஓவியங்களை வரைந்த ஓவியர்கள், சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இடையே போட்டிகள், வினாவிடை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்ற ரஜினி பட வசனங்களை பேசும் நிகழ்ச்சி உள்பட ஏராளமான பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஓவியங்களை வரைந்த ஓவியர்களுக்கு பெர்கர் பெயின்ட்ஸ் நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த கண்காட்சியை தொடர்ந்து, சுவரோவியங்கள் தமிழ்நாடு முழுவதும் \”சுவரோவிய யாத்திரை\” மூலம் கொண்டு செல்லப்படும். அத்துடன் பெர்கர் பெயின்ட்ஸின் விரிவான டீலர்கள் மற்றும் சில்லரை விற்பனை இடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த சுவரோவியங்கள் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பட சாதனைகளையும், பெர்கர் பெயின்ட்ஸின் 100 ஆண்டுகால பாரம்பரியத்தையும் சிறப்பையும் கொண்டதாக இருக்கும். எல்லைகள் கடந்த ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ரஜினிகாந்தின் சாதனைகளையும், தமிழகத்தின் வளமான துடிப்பான திரைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த \”50 ஆண்டுகால நட்சத்திர அந்தஸ்து\” கண்காட்சியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள், பெர்கர் பெயின்ட்ஸ் நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.