62 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப கொடியாளம் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை
*விவசாயிகள் கோரிக்கை
ஓசூர் : ஓசூர் அருகே கொடியாளம் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து, 62 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் சிக்கபளாபூர் மாவட்டம், நந்தி மலையில் உற்பத்தியாகி, கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ தூரம் பயணித்து தமிழகத்தில் கொடியாளம் பகுதியில் 215 மீ.நீளம் மற்றும் 1.60 மீ உயரத்தில் உள்ள தடுப்பணை வழியாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்குச் செல்கிறது. கொடியாளம் தடுப்பணையின் இடதுபுறம் 3,300 மீட்டர் தூரமும், வலதுபுறம் 3,200 மீட்டர் தூரமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கொடியாளம், பெலத்தூர், அக்ரஹாரம், பாகலூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், இடதுபுற கால்வாய் மூலம் 106 ஏக்கரும், வலதுபுற கால்வாய் மூலம் 94 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மருத்துவக் கழிவுகள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், நேரடியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கின்றன.
இதனால், தமிழகத்தில் கொடியாளம் தடுப்பணைக்கு வரும் தண்ணீர் மாசடைந்து, ரசாயன நுரை பொங்கி கெலவரப்பள்ளி அணையில் தேங்குகிறது. விளைநிலங்கள் பாழாகும் என்பதால், இந்த நீரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்துவதில்லை.
இதன் காரணமாக, இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடியாளம் தடுப்பணை பகுதியில், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நீரை சுத்திகரிப்பு செய்து கெலவரப்பள்ளி அணைக்கு விட வேண்டும். கொடியாளம் தடுப்பணை மற்றும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். வலது மற்றும் இடதுபுற கால்வாயை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பாகலூர் மற்றும் நெல்லூர் பகுதிகளில் நல்ல மண்வளம் இருந்தும், தண்ணீர் வசதியில்லாததால் பருவமழையை நம்பியிருக்க வேண்டிய நிலையுள்ளது. கொடியாளம் தடுப்பணை தண்ணீரை, பாசனத்துக்கு பயன்படுத்தாததால், பராமரிப்பின்றி கால்வாய் முழுவதும் செடி,கொடிகள் முளைத்துள்ளது.
எனவே, கொடியாளம் தடுப்பணை பகுதியில், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் நீரை வெளியேற்ற வேண்டும். மேலும், தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து, கால்வாயை தூர்வார வேண்டும். தடுப்பணையின் கால்வாயை நீட்டிக்க வேண்டும். பாகலூரை சுற்றி உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம்.
இதனையடுத்து, கொடியாளம் தடுப்பணையிலிருந்து இருந்து மின் மோட்டார் அமைத்து, குழாய் வாயிலாக 62 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2017ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இத்திட்டம் ரூ.300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ரூ.2.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு, நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு சாத்தியக்கூறு இருப்பதாக அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.