பூதங்குடி ஊராட்சியில் சாலையோரம் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை
*வாகன ஓட்டிகள் கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாழ் வாய்க்கால் பகுதியில் வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் பாசன வாய்க்கால் செல்கிறது. இதையொட்டி தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் பாசன வாய்க்கால் சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது.
மேலும் இப்பகுதி வழியாக வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள் அவதியடைகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இச்சாலை வழியாக பள்ளி மாணவர்கள் மற்றும் இங்குள்ள துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்வாரிய ஊழியர்களும் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகம் சுளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையோரம் கொட்டியுள்ள குப்பை கழிவுகளை அகற்றி, இங்கு குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.