ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று திறனாளிகள் என்று கருத அவசர சட்டம் இயற்றலாம் : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை!!
டெல்லி : ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று திறனாளிகள் என்று கருத அவசர சட்டம் இயற்றலாம் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண் ஒருவர் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகி வாதிட்டார். அப்போது வாயில் ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பெண்ணின் சார்பாக ஆஜராகி உள்ளதாக தெரிவித்தார். 2009ம் ஆண்டு ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண், கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று குழாய் மூலம் உணவு உட்கொண்டு வருகிறார், வழக்கு இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி அமர்வு, 2009ம் ஆண்டு வழக்கை இன்னும் முடிக்கவில்லையா, தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலைமையா, இது மிகவும் அவமானம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், ஆசிட் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் என்றும் தெரிவித்தனர். ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் மாற்றுத் திறனாளிகள் என்கிற வரம்பிற்குள் கொண்டு வரலாம், இதற்கு அவசர சட்டம் இயற்றலாம் என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் எடுத்துரைத்தனர். இதற்கு பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆசிட் தாக்குதல் வழக்குகளின் விபரங்களை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.