சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரை முருகன் வழக்கு: வேறு நீதிபதி விசாரிக்க நீதிபதி தண்டபாணி உத்தரவு
சென்னை: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006-11ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. வேலூர் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2017 ம் ஆண்டு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2019 ம் ஆண்டு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதியின் தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கை மீண்டும் வேலூருக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி சதீஷ்குமார், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், அரசாணையை எதிர்த்த இந்த வழக்கை அதே நீதிபதி முன் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.