ஆரல்வாய்மொழியில் அதிகாலை விபத்து: ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த லாரி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எடைமேடை அருகே 2 லாரிகள் மோதி நடந்த விபத்தில், டிரைவர் படுகாயத்துடன் தப்பினார். இந்த விபத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளம் கடத்தப்படுவதை தடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். உரிய எடை பரிசோதனை, அனுமதி சீட்டு இருந்தால் தான் கனிம வள வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. போலி அனுமதி சீட்டுடன், கனிம வளம் கொண்டு வரும் டாரஸ் லாரிகள், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டத்துக்கு கனிமங்கள் கொண்டு வரும் டாரஸ் லாரிகள், காவல்கிணற்றில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக குமாரபுரம் வரை வருகின்றன. குமாரத்தில் இருந்து இடதுபுறம் உள்ள சாலை வழியாக, நாகர்கோவில் - காவல்கிணறு பைபாஸ் ரோட்டில், அமைக்கப்பட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சி சார்பிலான எடை பரிசோதனை மையத்தில் எடை போடப்பட்டு, பின்னர் மீண்டும் குமாரபுரம் வழியாக நான்கு வழிச்சாலைக்கு வந்து அங்குள்ள சோதனை சாவடியில் பரிசோதனை முடித்து மாவட்டத்துக்குள் வருகின்றன.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் உள்ள எடை மேடையை நான்கு வழிச்சாலைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்ைக உள்ளது. தற்போதுள்ள நெடுஞ்சாலை குறுகிய சாலை ஆகும். இங்குள்ள எடைமேடையில் எடை போட்டு விட்டு டாரஸ் லாரிகள் திரும்பும் போது மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலை, ஆரல்வாய்மொழி பேரூராட்சி எடைமேடையில், ஜல்லி ஏற்றி வந்த லாரி எடை சோதனை முடிந்து திரும்பியது. அப்போது நாகர்கோவிலுக்கு பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த லாரி, டாரஸ் லாரி மீது மோதியது. இதில் பொருட்கள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த டிரைவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். டாரஸ் லாரியின் முன் பகுதியும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தால் காவல்கிணறு - நாகர்கோவில் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசாரும், விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்த சோதனை சாவடி போலீசாரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன. டாரஸ் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு சொந்தமாக, நான்கு வழிச்சாலையில் குமாரபுரம் அருகில் எடைமேடை அமைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.