தேனி பழைய பஸ் நிலையத்தில் தற்காலிக ஓடுதளத்தால் விபத்து அபாயம்
தேனி : தேனி நகர் பழைய பஸ்நிலையத்தில் ஓடுதளம் அமைக்கப்படாமல் தற்காலிக ஓடுதளமாக ஜல்லிக்கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து வெளியேறும் ராஜவாய்க்காலானது தேனி நகர் பழைய பஸ்நிலையமான காமராஜர் பஸ் முனையத்தின் வழியாக சுமார் 2 கிமீ தூரத்தை கடந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை அடைகிறது.
இந்த ராஜவாய்க்கால் தேனி நகர் பழைய பஸ் நிலையத்திற்குள் செல்கிறது. எனவே, ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 10 அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான தரைமட்ட சுரங்கம் அமைத்து அதன்வழியாக ராஜவாய்க்கால் தண்ணீரை ராஜவாய்க்காலில் பாய்ந்தோட செய்யவும், இந்த தரைமட்ட சுரங்கத்தின் மீது கான்கிரீட் பாலம் அமைத்து, அதன்மீது பேருந்துகள் சென்று வரவும் தேனி&அல்லிநகரம் நகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, தேனி பழைய பஸ்நிலையமான காமராஜர் பஸ் முனையத்தின் தெற்கு பகுதியில் ராஜவாய்க்கால் தரைமட்ட நீர்சுரங்கமானது 90 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் கடந்த ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்டு மாதம் வரை நடந்தது. இப்பணிகளுக்காக தேனி பழைய பஸ்நிலையம் தற்காலிகமாக நகராட்சி நிர்வாகம் மூடியது.
இதனால், தேனி புதியபஸ்நிலையத்தில் இருந்து போடி, கம்பம், குமுளி செல்லும் பேருந்துகள், பழைய பஸ்நிலையத்திற்கு வெளியே கம்பம் சாலை மற்றும் மதுரை சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தங்களில் ஏற்றி இறக்கி சென்று வந்தன.
இந்நிலையில் தேனி பழைய பஸ்நிலையத்திற்குள் பாலம் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 25ம் தேதி முடிந்தது. இதனையடுத்து, பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் வகையில் தற்காலிக ஓடுதளம் தயார் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 28ம்தேதி முதல் தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வருகிறது.இப்பழைய பஸ்நிலையத்திற்குள் சுரங்கபாலம் கட்டும் பணி முடிந்து, பழைய பஸ்நிலையம் வழியாக போக்குவரத்து தொடங்கி 2 மாதம் ஆகியுள்ள நிலையில், இதுவரை தேனி நகராட்சி நிர்வாகம், பழைய பஸ்நிலையத்திற்குள் பாலம் உள்ள பகுதிகள் தவிர இதரபகுதியில் முறையான தார்ச்சாலையாகவோ அல்லது கான்கிரீட்டினாலான சாலையாகவோ இதுவரை போடவில்லை.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், இப்பழைய பஸ்நிலையத்தில் சுரங்கபாலம் உயரமாகவும், ஓடுதளம் தாழ்வாகவும் உள்ளதாலும், ஓடுதளத்தில் லைஅமைக்கப்படாமல் தற்காலிக சாலைக்காக ஜல்லிக்கற்கள் கொண்ட சாலை அமைக்கப்பட்டதால் மழை பெய்யும் போது, தண்ணீர் இப்பகுதியில் தேங்கி சாலை மிகவும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், தேனி நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வாக பழைய பஸ்நிலையத்திற்குள் நிரந்தர ஓடுதள சாலை அமைக்காமல் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக ஜல்லிக்கற்களை மட்டும் கொண்ட சாலை அமைப்பதால் பஸ்கள் வந்து செல்லும்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பஸ்களின் டயர்களில் சிக்கி ஆங்காங்கே வீசியெறியும் நிலை உள்ளது.பழைய பஸ்நிலையத்திற்குள் பழுதடைந்த ஓடுதள சாலையால் விபத்து ஏற்படும் முன்னர், நகராட்சி நிர்வாகம் புதிய தார்ச்சாலையோ அல்லது கான்கிரீட் சாலையோ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.