ஏசி பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல 10 ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்: மலிவு விலையில் வழங்க ஏற்பாடு; ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகிறது
சென்னை: ரயிலில் ஏசி பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல 10 ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வசதி வருகிற ஜனவரி 1ம் தேதி அமல்படுத்தப்படுகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பயணத்தில் ரயில் பயணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ரயிலில் குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் செல்ல முடியும் என்பதால் நிறைய பேர் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் விரும்பி வருகின்றனர். அதுவும் விசேஷ நாட்களில் முதலில் விரும்புவது ரயில் பயணத்தை தான். அதுவும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கடும் போட்டி நிலவி வரும். அதுவும் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கும் சில நிமிடங்களிலேயே ரயில் டிக்கெட் என்பது விற்று தீர்ந்து விடும். வெயிட்டிங் லிஸ்ட் தான் கிடைக்கும் அந்த வகையில் ரயில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
தற்போது பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் 2 நிமிடத்திலேயே டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து, இனிமேல் டிக்கெட் எடுக்க முடியாத அளவுக்கு \\”ரெக்கரட்\\” நிலை என்பது இருந்து வருகிறது. அதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களிலும் இந்த நிலை தான் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ரயில் பயணத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டி, இரண்டாம் வகுப்பு பெட்டி, மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஏசி வசதி உள்ளது. இதில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் 2 படுக்கை விரிப்புகள் என ரயில்வே சார்பில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த போர்வை, துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றை பயணிகள் ரயில் பயணத்தின் போது மட்டுமே இலவசமாக பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு போர்வை, ஒரு தலையணை மற்றும் 2 படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் இந்தியன் ரயில்வேயில் முதன்முறையாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு சுகாதாரமான படுக்கை விரிப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு: ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளின் வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஒரு முன்னோடி சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. வரும் ஜனவரி 1ம் தேதி ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள், கட்டணம் செலுத்தி சுகாதாரமான, பயன்படுத்தத் தயாராக உள்ள படுக்கை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை சிலீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கும் வசதி முறைப்படுத்தப்படவில்லை. இதனை நிவர்த்தி செய்ய, சென்னை கோட்டம் 2023-24ம் ஆண்டில் என்ஐஎன்எப்ஆஐஸ் திட்டத்தின் கீழ் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்கு பயணிகளிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இதனை ஒரு நிரந்தர ‘கட்டணம் சாரா வருவாய் திட்டமாக’ அறிமுகப்படுத்துகிறது.
ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளின் வசதியை மேம்படுத்துதல், தேவைக்கேற்ப மலிவு விலையில் பயன்படுத்த தயாராக உள்ள படுக்கை விரிப்புகள், சிறப்பான பயண அனுபவத்தை உறுதி செய்தல், இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டுதல் இத்திட்டத்தின் கீழ், படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்தல், இயந்திரம் மூலம் சுத்தம் செய்தல், பேக்கிங், ரயிலில் ஏற்றுதல், விநியோகம் மற்றும் சேமிப்பு ஆகிய அனைத்து பணிகளையும் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் நிர்வகிப்பார். முதற்கட்டமாக, சென்னை கோட்டத்தால் பராமரிக்கப்படும் 10 ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹28,27,653 உரிமக் கட்டணமாகக் கிடைக்கும். பயணிகள் சார்ந்த நடைமுறை வசதிகளை மேம்படுத்துவதிலும், புதுமையான சேவைகள் மூலம் வருவாயை உயர்த்துவதிலும் சென்னை கோட்டம் தனது உறுதிப்பாட்டைத் இதன் மூலம் தொடர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* 10 ரயில்கள் எவை?
சென்னை கோட்டத்தால் பராமரிக்கப்படும் 10 ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் மூன்று ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது நீலகிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12671, 12672), மங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12685), மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179, 16180), திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20605, 20606), பொதிகை எக்ஸ்பிரஸ் (22651, 22652), சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20681, 20682), தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22657, 22658) ரயில்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல, திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12695, 12696), ஆலப்புலா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22639, 22640), மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159, 16160) ஆகிய ரயில்களில் சிலீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் அமல்படுத்தப்பட உள்ளது.