தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் திடீர் ஆலோசனை
சென்னை: கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், நிர்மல் குமார், ஆனந்த் தலைமறைவானதாக கூறப்பட்டது.
தொடர்ந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் எஸ்ஐடி விசாரணையை நிறுத்தி வைத்தது.
இதனால், ஆனந்த், வெளியே வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் அவரை சந்தித்து ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரில் புறப்பட்ட ஆனந்த் புதுச்சேரி நோக்கி சென்றார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்திக்க கரூருக்கு விஜய் செல்லும்போது அவருக்கு பாதுகாப்பு தருவது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.