2019ல் காந்தி உருவபொம்மையை சுட்ட இந்து மகாசபை தலைவி தொழிலதிபர் கொலை வழக்கில் தலைமறைவு: கணவர், கூலிப்படை கொலையாளி கைது
அலிகார்: உத்தரப் பிரதேசத்தில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து மகாசபை பெண் தலைவர் தலைமறைவான நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மகாசபையின் சர்ச்சைக்குரிய தலைவரான பூஜா ஷகுன் பாண்டே, கடந்த 2019ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அவரது படுகொலையை மீண்டும் அரங்கேற்றியது போன்ற காணொளியை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசுவது, ஹரித்வார் தர்ம சன்சத் போன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் பங்கேற்பது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இவர், தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பூஜா ஷகுன் பாண்டே தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி, பைக் ஷோரூம் உரிமையாளரான அபிஷேக் குப்தா (30) என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பூஜாவின் கணவர் அசோக் பாண்டே மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த முகமது ஃபசல் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக அபிஷேக்கைக் கொலை செய்ய, பூஜாவும் அவரது கணவரும் தங்களுக்கு 3 லட்சம் ரூபாய் கூலி பேசியதாக முகமது ஃபசல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், அபிஷேக்கின் தந்தை நீரஜ் குப்தா, தனது மகனுக்கும் பூஜாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், தொழிலில் பங்குதாரராக ஆக்கக் கோரியும் பூஜா வற்புறுத்தியதாகவும், சமீபத்தில் அபிஷேக் அவரை விட்டு விலகியதால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள பூஜா ஷகுன் பாண்டே மற்றும் மற்றொரு குற்றவாளியான ஆசிப் ஆகியோரை சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.