ஆவின் பால் எடுத்து செல்லும் வாகன டெண்டரை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை: ஆவின் பால் பண்ணையிலிருந்து, சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு சேகரிப்பு மையங்களுக்கு பால் விநியோகம் செய்வதற்காக 143 லாரிகளுக்கான டெண்டர் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான டெண்டர் கடந்த ஜூலை 7 ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த டெண்டரில் உணவு பாதுக்காப்பு துறையின் சான்று பெறாத லாரிகள், குடிநீர், கழிவு நீர் எடுத்தும் லாரிகள் என பால் எடுத்து செல்ல தகுதியற்ற வாகனங்கள் இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க ஆவின் அதிகாரிகள் அனுமதியள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் டெண்டரில் விதிகள் மீறப்பட்டதாகவும் அதை ரத்து செய்ய கோரியும் ஞானசேகரன் என்ற ஒப்பந்ததாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டெண்டர் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆவின் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.