தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் விற்பனையை 30% அதிகரிக்க திட்டம்: கூடுதலாக 180 டன் இனிப்பு வகைகள் தயாரிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு ஆவினில் 30 சதவீதம் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக 180 டன் இனிப்பு தயாரிக்கப்படுகிறது என ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆவின் உயர் அதிகாரி கூறியதாவது: ஆவின் நிறுவனம் சார்பில், இந்த தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கான பணிகள் அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பால் பண்ணைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை விட 30 சதவீதம் வரை விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சுமார் 180 டன் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது.
மைசூர்பாகு 250 கிராம் ரூ.140, 500 கிராம் ரூ. 270, பால்கோவா 250 கிராம் ரூ.130, 500 கிராம் ரூ. 250க்கும், நெய் 100 மி.லி., ரூ.80க்கும், 500 மி.லி., ரூ.345, ஒரு லிட்டர் ரூ.660க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி.,வரி குறைப்பால் நெய் லிட்டருக்கு ரூ.40 குறைந்துள்ளது. இது தவிர கோவா சுவீட், மைசூர்பாகு, மில்க் கேக், மில்க் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமூன், பேரீச்சம் கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் கிலோ ரூ.450 மற்றும் ரூ.500க்கு விற்கப்படுகிறது. மேலும் மிக்சர், முறுக்கு, கார வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இனிப்பு வகைகள்
⦁ நெய் பாதுஷா - 250 கிராம், நட்ஸ் அல்வா - 250 கிராம், மோத்தி பாக் - 250 கிராம், காஜு பிஸ்தா ரோல் - 250 கிராம், காஜு கட்லி - 250 கிராம் உள்ளிட்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
1) பொதுமக்கள் ஆவின் சுவீட் வகைகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு வசதியாக 30 லட்சம் பால் பாக்கெட்டுகளிலும் ஆர்டர் கொடுக்கக்கூடிய தொடர்பு எண்.7358018395 அச்சிடப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு ஆவின் சுவீட் வகைகளை முன்பதிவு செய்து பெறலாம்.
2) காஜு கத்திலி, காஜு பிஸ்தா, நட்ஸ் அல்வா, நட்ஸ் பாதுஷா ஆகிய சிறப்பு இனிப்பு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3) பொதுமக்கள் நந்தனம் ஆவின் பார்லர் மற்றும் சென்னையில் உள்ள 35 பார்லர்களிலும் ஆவின் இனிப்புக்கு முன்பதிவு செய்யலாம். நேரில் சென்றும் தேவையான அளவு வாங்கலாம்.