ஆவணி மாத பூஜை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
திருவனந்தபுரம்: ஆவணி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் இரவில் படிபூஜையும் நடைபெறுகிறது. நடை திறந்த அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
இடையிடையே பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். நாளை மறுநாள் (21ம் தேதி) வரை கோயில் நடை திறந்திருக்கும். இதற்கிடையே சபரிமலை கோயில் கீழ்சாந்தியாக பாறசாலை தேவசம் மேல்சாந்தியான ஹரீஷ் போத்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பம்பை கணபதி கோயில் மேல்சாந்திகளாக சங்கரன் நம்பூதிரி மற்றும் விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.