கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்
மதுரை: மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழங்கி வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவத் தலங்களில் முக்கிய வைணவத் தலமாக அழகர்கோவில் திகழ்கிறது. இங்குள்ள கள்ளழகர் கோயில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மற்றும் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி இரவு அன்னம், கருடன், சிம்மம், அனுமார், சேஷம், மோகினி, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலை தேவியர்களுடன் சுந்தரராஜப் பெருமாள் சமேதராக தேரில் எழுந்தருளினார். காலை 8.45 மணியளவில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் முழங்கி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோட்டை வாசலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் தேர் அசைந்தாடி, அசைந்தாடி சென்று நிலைக்கு வந்தது. இதையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், பொங்கல் வைத்தும், நெல் உள்ளிட்ட தானியங்களையும் காணிக்கையாகவும் செலுத்தினர். தேரோட்டத்தை காண மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கும், வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும் இன்று விஷேச பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பெரியபுள்ளான், வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.