ஆடிச் சலுகைகளும், அனல் பறக்கும் விற்பனைகளும்! அலெர்ட்டாக இருப்பது எப்படி?
ஆடி மாசம் ஆபர்களும், சலுகைகளும் எங்கும் அனல் பறக்கிறது.1 வாங்கினால் 1 ஃப்ரீ துவங்கி 1 வாங்கினா 4 ஃப்ரீ வரை தள்ளுபடிகளை அள்ளி வழங்கி தலை சுற்ற வைப்பார்கள். இதில் ஆடைகள், ஆபரணங்களுக்கு சலுகைகள் கொடுத்தால் கூட பரவாயில்லை, எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள், ஏன் தரைதுடைக்கும் துடைப்பம் வரையிலும் இந்த தள்ளுபடி காய்ச்சல் விட்டு வைக்கவில்லை. அதெல்லாம் இருக்கட்டும் எந்த பண்டிகையும் இல்லாமல் , ஒரு கல்யாணக்காட்சி கூட இல்லாமல் நான் ஏன்பாட்ரெஸ் வாங்கனும்? எனக் கேட்டால் அதுதான் திட்டமே. ஆடி மாசத்தில் கோவில் திருவிழாக்கள் மட்டுமே நடக்கும். மேலும் வீட்டில் சில பூஜைகள் நடக்கும் அவ்வளவுதான். கல்யாணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்கள் எதுவும் நடக்காது. எதுவும் விற்பனையும் ஆகாது. பிறகு ஏன் இந்த சலுகைகள்? அடுத்து வரவிருக்கும் பண்டிகைக்காலங்களை முன்வைத்து இருக்கும் பழைய ஸ்டாக்கு களை விற்றுத் தீர்க்கவே உருவாக்கப்பட்டது இந்த ஆடி ஆஃபர்கள். இந்த பழைய பொருட்கள் வெளியேறியவுடன் அடுத்து வரும் விழாக்களுக்காக புது ஸ்டாக்குகளை இறக்குமதி செய்வார்கள். மேலும் அடுத்தடுத்து நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி, என தொடர்ந்து பண்டிகை காலங்கள் இருப்பதால், இந்த ஆஃபர்களை பயன்படுத்தி ஷாப்பிங் போகிற மக்களும் ஏராளம். குறிப்பாக அந்த பழக்கத்தை ஏற்படுத்தியதும் இந்த வியாபாரத் தந்திரம்தான். சரி எப்போது வாங்கினால் என்ன சலுகை விலையில் நல்ல பொருட்கள் கிடைக்கும் பொழுது யார்தான் வேண்டாம் என்று சொல்வோம். அதே சமயம் சலுகை தள்ளுபடி என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு பொருட்களை வாங்கிக்குவிக்க வேண்டாம். ஆடி ஆபர்களையும் கொடுக்கப்பட்ட தள்ளுபடிகளையும் எப்படி ஆராய்ந்து வாங்குவது இதோ சில டிப்ஸ்.
*என்ன வாங்க வேண்டும் என்கிற பட்டியலுடன் பொருட்கள் வாங்குங்கள்: தேவையானவை என்ன? அவசரமா? விருப்பமா? என பட்டியலிடுங்கள்.
*திட்டமிடாமல் போனால் தள்ளுபடி ஆசையில் தேவையில்லாத செலவு நடக்கும்.
* உண்மையான தள்ளுபடியா என சரிபாருங்கள். சில கடைகள் பழைய விலையை ஏற்றி “70% தள்ளுபடி” என காட்டுவார்கள்.
* நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் முந்தைய விலை, தற்போதைய விலை ஆகியவற்றை ஒப்பிட்டுப்பாருங்கள்.
* அதை தெரிந்துகொள்ள ஆடி ஆரம்பிக்கும் முன்பே ஒரு விசிட் அடிப்பது நல்லது. ஆனால் இப்போது தாமதமாகி விட்டது. ஆனால் ஒருசில பொருட்கள், உடைகள் இணையத்தில் காணக் கிடைக்கும். அவற்றைப்புகைப்படம் எடுத்து Google Lens வசதியால் தேடினால் அதன் உண்மையான விலை தெரிந்து கொள்ளலாம்.
* சில வங்கிகள் டெபிட்/கிரெடிட் கார்ட்-க்கு கூடுதல் தள்ளுபடி, காஷ்பேக், இஎம்ஐ சலுகைகள் அளிக்கின்றன. அவற்றை வீட்டிலேயே தெரிந்துகொண்டு எங்கே எந்த சலுகைகளை, கூப்பன்களை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு செல்லுங்கள்.
* UPI மூலம் செலுத்தினால் கூட சலுகை கிடைக்கலாம்.Gpay செயலியில் Reward வசதியில் இருக்கும் ஸ்கிராட்ச் கார்டுகளையும் ஒருமுறை சோதித்து விட்டுச்செல்லுங்கள். ஏனெனில் Lenskart, Fast track, போன்ற பிராண்டுகள் UPI பணப்பரிவர்த்தனையில் இதுபோன்ற சலுகைகளைக்கொடுப்பதுண்டு.
* பெரும்பாலான தள்ளுபடி விற்பனைகளில் மாற்ற அல்லது ரிட்டர்ன் கொடுக்க வாய்ப்புகள் இருக்காது. எனவே நிச்சயம் ஒருமுறை அணிந்து பார்த்து வாங்குங்கள்.
* உங்கள் பாதுகாப்புக்காக பில் (Receipt) பெறுவது அவசியம். அதேபோல் இதுபோன்ற சலுகைக்காலங்களில் GST/ Tax உள்ளிட்டவை இரட்டிப்பு மடங்காக அல்லது இரண்டுமூன்று முறை சேர்க்கப்பட்டு இறுதியாக வரும் பில்லுடன் இணைத்து நமக்கே தெரியாமல் பணத்தை பிடுங்கி விடும் வாய்ப்புகளும் உள்ளன.
*சப்ளிமென்ட், காஸ்மெடிக்ஸ், நறுமணப்பொருட்கள் , பாக்கெட் உணவுகள் போன்றவை விலைகுறைபாட்டில் வந்தாலும் காலாவதி தேதியை பார்க்கவேண்டும். ஒருசில ப்ராடக்டுகள் காலாவதி தேதி மீது புதிதாக ஏதேனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றனவா எனவும் சோதிக்கவும்.
* பராமரிப்பு பில்லும், அளவுகள், பட்டன்/ஜிப் , சேதாரம் உள்ளதா என்பதையும் பார்த்துவிட்டு வாங்குங்கள்.
*ஆன்லைனுக்கும், கடைக்கும் ஒப்பீடு செய்யுங்கள். கடைகளில் தள்ளுபடி தாண்டி கொடுக்கும் விலையை விடவும் ஆன்லைனில் ஒருசில பொருட்களுக்கு விலைகுறைவாக இருக்கும்.
* “பாலிசி படிக்காமல் வாங்கினேன்” என்ற பிந்தைய புலம்பலை தவிர்க்க, வாங்கும் முன் “மாற்றம் - ரிட்டர்ன் - கேஷ்பேக்” குறித்த விவரங்களை கேளுங்கள். அல்லது Terms & Conditions படியுங்கள்.
* இணையதள ஷாப்பிங்கில் இப்படி ஏதேனும் சலுகை அறிவிப்புகள் வரப்போகிறது எனில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் 10 ப்ராடக்டுகளை விருப்பத்தேர்வில் போட்டு வையுங்கள். அவர்கள் அறிவித்த சலுகை விலையில் நீங்கள் பார்த்த விடையை விட உண்மையில் குறைந்திருக்கிறதா என சோதித்து பார்த்துவாங்கலாம். சிந்தித்துப் பார்த்து, சந்தோஷமாகச் சலுகைகளை பயன்படுத்துங்கள். குறிப்பாக இணையதள தள்ளுபடிகளில் நன்கு தெரிந்த தளங்கள் தவிர சமூக வலைத்தள விளம்பரங்களில் வரும் புதுத்தளங்களை நம்பாதீர்கள்.
- ஷாலினி நியூட்டன்.