பர்கூர்-தேவர்மலை சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை: ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகள்
அந்தியூர்: பர்கூர்-தேவர்மலை சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேவர்மலையிலிருந்து தாமரைக்கரை செல்லும் சாலையில் நேற்றுமாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டுயானை சாலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் யானையை பார்த்ததும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நின்றுகொண்டிருந்த யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், யானை அருகே சென்று செல்பி எடுத்த நபரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.