கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
சாயல்குடி: பேரையூரில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோவிலாங்குளம், பேரையூர் உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அவ்வப்போது கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. சாலையோரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து கசியும் நீரை குடித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று பேரையூரில் விவசாய நிலப்பகுதியில் புள்ளிமான் சுற்றித்திரிந்தது. அந்த மான் திடீரென அப்பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தது.
இதை பார்த்த விவசாயிகள் முதுகுளத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மானை உயிருடன் மீட்டனர். இது, 5 வயது பெண் மான் எனவும், தற்போது சினையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த மானை சாயல்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவரால் முதலுதவி சிகிச்சை, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மான் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.