ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்த ஒற்றை யானை: வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கிருஷ்ணகிரி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை பிளிறியவாறு கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று மாலை வனத்திலிருந்து திடீரென வெளியே வந்த அந்த ஒற்றை யானை பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து கோபசந்தரம் வனப்பகுதிக்கு சென்றது. அதனைக்கண்டு சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் வாகனங்களை சடன் பிரேக் போட்டு நிறுத்தினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருபக்கமும் அணிவகுத்து நின்றன.
அப்போது, சிலர் யானையை போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதுமாக இருந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் யானைக்கு மிக அருகாமையில் சென்றனர். அவர்களை கண்டதும் அந்த யானை பயங்கரமாக பிளிறியவாறு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனால், சாலையில் நின்றிருந்த பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தினர். இதையடுத்து, அந்த யானை கோபசந்திரம் வனப்பகுதிக்குள் சென்றது. அதனைக்கண்டு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ‘ஒற்றை காட்டு யானை நேற்று வேப்பனப்பள்ளி பகுதியில் இருந்து சூளகிரி வனப்பகுதி வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளது.
தற்போது, சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், சுற்றுப்புற பகுதியில் உள்ள போடூர் மற்றும் ஆழியாளம், நாயக்கனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி, அம்பலட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விவசாய நிலத்தில் இரவு நேர காவல் பணியை தவிர்க்க வேண்டும். மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றார்.